திருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளிகளில், ஆண்டு முழுவதும் நீடித்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பற்றாக்குறையால், பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் சரிந்திருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், 20172018ம் கல்வி ஆண்டில் 13,631 மாணவர்கள், 14,866 மாணவிகள் உள்பட மொத்தம் 28,497 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அதில், 25,069 பேர் தேர்ச்சி பெற்றனர். 2,097 மாணவர்கள், 1,331 மாணவிகள் உள்பட 3,428 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளில் பெரும்பாலானவர்கள், ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் மட்டுமே தேர்ச்சி தவறியுள்ளனர். அவ்வாறு தேர்ச்சி பெற தவறிய பாடங்களுக்கான முதுநிலை பாடப்பிரிவு ஆசிரியர்கள், கடந்த கல்வி ஆண்டு முழுவதும் இல்லாதது, தேர்ச்சி குறைய முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

அதிகபட்சமாக 860 கிராம ஊராட்சிகளையும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குக்கிராமங்களையும் உள்ளடக்கியது திருவண்ணாமலை மாவட்டம். இந்த மாவட்டத்தில், மொத்தம் 4 நகராட்சிகள் மட்டுமே உள்ளன. இந்த மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையான 24.64 லட்சத்தில், 19.69 லட்சம் மக்கள் கிராமங்களில் வசிக்கின்றனர். அதேபோல், இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 221 மேல்நிலைப்பள்ளிகளில், 133 அரசு மேல்நிலைப்பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 28,497 மாணவர்களில், 19,879 மாணவர்கள் அரசு பள்ளிகளில் படித்தவர்கள். 8,618 மாணவர்கள் மட்டுமே தனியார் பள்ளிகளில் படித்தவர்கள். மாவட்டத்தின் மொத்த பிளஸ் 2 மாணவர்கள் எண்ணிக்கையில் 70 சதவீதம் பேர் அரசு பள்ளிகளில் படித்தவர்கள்.

விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள, திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு அரசு பள்ளிகள் மட்டுமே புகலிடம். அதை நம்பியே தங்களுடைய எதிர்காலத்தை அமைக்கின்றனர். தனியார் பள்ளிகளில் பணம் செலுத்தி படிக்கும் வசதியும், வாய்ப்பும் இல்லாத லட்சக்கணக்கான குழந்தைகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளனர். ஆனால், அரசு பள்ளிகளில் தொடரும் ஆசிரியர் பற்றாக்குறையால், இப்பள்ளிகளை நம்பி வரும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகிறது. கடந்த 2017-2018ம் கல்வி ஆண்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 114 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. குறிப்பாக, கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற மாணவர்கள் சுயமாக படிக்க சிரமப்படும் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை.

இளநிலை பட்டதாரி ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் மதிப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும், முதுநிலை வகுப்புகளுக்கு பாடம் கற்பித்தனர். அதனால், ஓரளவு பிளஸ் 2 தேர்ச்சி காப்பாற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிய அனுமதிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 1,265. மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதலாக தேவைப்படும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகம். மேலும், தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதில்லை. அவசியம் மிகுந்த காலிப்பணியிடங்களை நிரப்பாமல், கூடுதல் பணியிடங்களை அனுமதிக்காமல் அரசு கைவிரித்ததால், அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2016-2017ம் கல்வி ஆண்டில் 89.03 சதவீதம் தேர்ச்சி பெற்ற இம்மாவட்ட அரசு பள்ளிகள், இந்த கல்வி ஆண்டில் 84.16 சதவீதம் மட்டுமே தேர்ச்சியடைந்திருக்கிறது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சியை அதிகரிக்க, மாவட்ட நிர்வாகமும், மாவட்ட கல்வித்துறையும் இணைந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டன. ஆசிரியர்களும் தங்களின் அதிகபட்ச அக்கறையையும், ஒத்துழைப்பையும் அளித்தனர். ஆனாலும், ஆசிரியர்கள் பற்றாக்குறை மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, வரும் 2018-2019ம் கல்வி ஆண்டில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக திருவண்ணாமலையை மாற்ற அரசு முன்வர வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு இடங்களுக்கு பணிமாற்றம் செய்யும் தவறான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது இம்மாவட்டத்துக்கு மக்களின் கோரிக்கையாக உள்ளது.