அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், விண்ணப்பம் வழங்குவது குறித்து, உயர்கல்வித் துறை முறையான அறிவிப்பு வெளியிடாததால், பெற்றோரும், மாணவர்களும் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, மாணவர்கள், உயர்கல்வியில் சேரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இன்ஜினியரிங், கலை, அறிவியல் கல்லுாரிகள் உள்ளிட்டவற்றில், விண்ணப்பம் பதிவு செய்யும் பணிகளை துவங்கினர்.இதற்காக, மாணவர்கள், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் விண்ணப்பம் வாங்க செல்கின்றனர்.முறையான, தேதி மற்றும் நேரம் குறித்த அறிவிப்புகள் இல்லாததால், விண்ணப்பம் வாங்க செல்லும் மாணவர்களும், பெற்றோரும், பல முறை கல்லுாரிகளுக்கு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
பெற்றோர் கூறியதாவது: இன்ஜினியரிங் கல்லுாரிகளில், கவுன்சிலிங் வழியாக, மாணவர் சேர்க்கை நடப்பதால், குழப்பமின்றி விண்ணப்பங்களை பதிவு செய்ய முடிகிறது. ஆனால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர, எந்த ஒரு வழிகாட்டுதலும் அறிவிக்கப்படவில்லை.ஒவ்வொரு கல்லுாரியும், ஒவ்வொரு தேதி, நேரத்தை நிர்ணயித்துள்ளன. சில கல்லுாரிகள், பிற்பகல் வரை மட்டுமே, விண்ணப்பங்களை வழங்குகின்றன. இந்தவிபரங்கள், கல்லுாரிகளுக்கு சென்ற பிறகே தெரிகிறது.இதனால், விண்ணப்பம் வாங்க செல்வோர், விண்ணப்பம் கிடைக்காமல் திரும்புகின்றனர். மேலும், விண்ணப்பம் வினியோகிக்கும் நேரத்தை, கல்லுாரிகள் அவ்வப்போது மாற்றுவதால், பல முறை அலைய வேண்டியுள்ளது.
கல்லுாரிகளின் இணையதளங்களிலும், விண்ணப்ப வினியோகம் குறித்த தகவல்கள் இல்லை. இது குறித்து, உயர்கல்வித் துறையும் முறையான அறிவிப்புகளை வெளியிடவில்லை.ஏற்கனவே உயர்கல்வியின் தரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், விண்ணப்பம் வழங்குவதிலேயே இத்தனை குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.இதை உடனடியாக, உயர்கல்வி அதிகாரிகள் சரி செய்து, சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள்கூறினர்.
0 Comments