பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதால் இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு பிளஸ் 2 கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 3 பாடங்களின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. கணித மதிப்பெண்ணுக்கு 50 சதவீதமும், இயற்பியல் மற்றும் வேதியியலுக்கு தலா 25 சதவீதமும் வெயிட்டேஜ் அளிக்கிறார்கள்.

பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியான நிலையில், 231 பேர் 1200-க்கு 1180 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளதாக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 1,171 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை 5 மடங்கு குறைந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பாடவாரியாக 200-க்கு 200 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அதுபோன்ற பட்டியலை தேர்வுத்துறை வெளியிடவில்லை. 200-க்கு 200 எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருக்கலாம் என்றும் அதனால்தான் பட்டியல் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 1,180-க்கு மேல் மதிப்பெண் பெற்ற கணிதம் மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்கள் பெரும்பாலும் கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடங்களில் 200-க்கு 200 அல்லது 199, 198 மதிப்பெண் பெற்றிருப்பவர்களாக இருப்பார்கள். அந்த வகையில், 1,180க்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 1,171-லிருந்து வெறும் 231 ஆக குறைந்திருப்பது மேற்குறிப்பிட்ட பாடங்களில் மதிப்பெண் குறைந்திருக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

இதன் காரணமாக, இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் குறையலாம் என்று கல்வியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது தொடர்பாக கல்வியாளரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் இயக்குநருமான (நுழைவுத்தேர்வுகள்) பேராசிரியர் நவநீதகிருஷ்ணனிடம் கேட்டபோது, “200-க்கு 200 மற்றும் மிக அதிக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவு காரணமாக கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக அதிக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் அதன் விளைவாக கட் ஆப் மதிப்பெண்ணும் ஒட்டுமொத்தமாக குறையும். எனவே அதிக மதிப்பெண் என்பதை காட்டிலும் தரவரிசைப் பட்டியலில் நமக்கு மேல் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்” என்றார்.

ஈரோடு கல்வியாளர் பேராசிரியர் மூர்த்தி செல்வகுமரன் கூறும்போது, “ நீட் தேர்வுக்கு படித்த மாணவர்கள் முக்கிய பாடங்களில் 200-க்கு 200 பெறுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லைபோல் தெரிகிறது. கணிதம் மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்கள் ஜெஇஇ, நீட் நுழைவுத்தேர்வுகளில் கவனம் செலுத்தியதால் அதிக மதிப்பெண் பெறுவதில் அக்கறை காட்டாமல் இருந்திருக்கலாம். இதனால் 200-க்கு 200 மற்றும் 199, 198 என்ற அளவில் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கக்கூடும்.

இதனால் பொறியியல் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் குறையும். 200 முதல் 195 வரையிலான மதிப்பெண்ணில் கட் ஆப் 1 மதிப்பெண்ணும், 194.75 முதல் 185 வரையிலான மதிப்பெண்ணில் 1.5 மதிப்பெண்ணும், 180 முதல் 160 வரையிலான மதிப்பெண்ணில் 2 மதிப்பெண்ணும் குறைய அதிக வாய்ப்புகள் உள்ளன” என்றார்.